Saturday 4th of May 2024 12:18:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.நாவுடன் முட்டி மோதி மூக்குடைய வேண்டாம்! - கோட்டாவுக்கு சஜித் அறிவுரை!

ஐ.நாவுடன் முட்டி மோதி மூக்குடைய வேண்டாம்! - கோட்டாவுக்கு சஜித் அறிவுரை!


"ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும்."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

'2020இல் 'கொரோனா' என்ற ஒரேயொரு 'எதிரியை எதிர்கொண்டோம். 2021இன் ஆரம்பத்தில் 'கொரோனா'வுடன் ஜெனிவாத் தீர்மானம் என்ற இரண்டு எதிரிகளை எதிர்கொள்ளவுள்ளோம். இந்த இரண்டு எதிரிகளுக்கும் 2021இன் ஆரம்பத்திலேயே இலங்கை அரசு முடிவுகட்டும்' என்று ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்றுமுன்தினம் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்குக் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐக்கிய நாடுகள் சபை மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு. உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களில் தொடர்பில் அந்தச் சபைதான் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே, ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தே செல்லும். இந்த விடயத்தில் நாட்டின் நலன் கருதி அரசு மிகவும் பக்குவமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் நாம் சர்வதேசத்தை மதித்து நடந்தோம். எமது இராஜதந்திர நகர்வுகளை உலகெங்கும் விஸ்தரித்தோம். அதனால்தான் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இருந்தன.

கொரோனா ஒரு கொடிய நோய். அது உலகெங்கும் உயிராபத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில், அதனுடன் ஜெனிவா விவகாரத்தையும் ஜனாதிபதி ஒப்பிட்டுப் பேசுவது கீழ்த்தரமான அரசியலாகும்.

இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிக்கும் செயற்பாட்டு நாம் அனைவரும் முழுமையான பங்களிப்பை அரசுக்கு வழங்கி வருகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளிருந்து இலங்கைக்குக் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம். எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும்.

இலங்கை மீது புதிதாக ஐ.நா. பிரேரணை வந்தால் அதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. புதிய பிரேரணை வருவதற்கு இந்த அரசே வழிவகுத்தது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE